(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, November 4, 2009

''ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா

எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்!'' _ சினிமா நகைச்சுவைக் காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச் சரியாகப் பொருந்தி விட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா.



'இளமை இதோ இதோ', 'முயலுக்கு மூனுகால்,' 'மானாமதுரை மல்லி', 'எனக்காகக் காத்திரு' போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது,
அதைவிட அதிர்ச்சியான செய்தி.

ஒரு முஸ்லிம் அமைப்பு மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நடைப்பிணமாக, ஒரு கட்டிலில் கிடந்த நடிகை நிஷாவை நாம் சந்தித்தோம். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என திகைக்கும் வண்ணம் காய்ந்த கருவாடாக கட்டிலில் கிடந்தார். நாம் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வருகிறோம் என்றதும் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்ட அவர், ''சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கனும்!'' என்று கதறினார்.


சினிமா ஸ்பாட் லைட்களின் ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது நம்மை உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார்.
''எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். நடிகர் கமலோடு 'டிக்...டிக்....டிக்', ரஜினி சாரோட 'ஸ்ரீராகவேந்திரர்', பாலசந்தர் சாரோட 'கல்யாண அகதிகள்' இன்னும் விசு சார், சந்திரசேகர் சார் டைரக்ஷனில் கூட நடிச்சிருக்கேன்'' என்றவர் தொடர்ந்தார்.



''அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். 'உனக்கு
சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே'ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார்.



நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!'' என்றார் கண்ணீருடன். 'உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?' என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ''நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். என் பெரியப்பா அப்துல் ஹமீதுவின் மகள் நிக்காவின்போது, தாலிக்கு நான் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதை அவர்கள் மறந்து விட்டார்கள். சொந்த ஊரில்... பெற்ற தந்தையின்
கண்முன்பே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது' என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.
அதன் பிறகு, ''சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடனும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!'' என்று கெஞ்சினார்.
நம்முடன் வந்திருந்த நண்பரொருவர் ஓடிச்சென்று அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். நிஷா, சென்னை பல்லாவரத்தில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மா என்பவரிடம் அலிபாய், ரபீர் என்பவர்கள் மூலமாக நகை மற்றும் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பதாகவும், நகையன்றை அடகு வைத்து அந்தப் பணத்தில் வாடகைக் கார் பிடித்து அலிபாய் மூலம்தான் நாகூர் வந்து சேர்ந்ததாகவும் நிஷா நம்மிடம் விவரித்தார். தந்தை மற்றும் உறவினர்கள் ஏற்க மறுத்து விட்ட நிலையில், நாகூர் தர்கா அருகே அவர் அனாதையாக விடப்பட்டிருக்கிறார்.
நடிகை நிஷாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்தபோது, நர்ஸ் ஒருவர் விடுவிடென்று வந்து நம்மை, அப்பால் அழைத்துச் சென்றார். ''அந்தம்மாவுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்திலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரிக்கு அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்!'' என்றார்
இரக்கக் குரலில். நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. நாகூரில் வசிக்கும் நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைச் சந்தித்தோம். ''நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணி திருமணம் செய்ததால், பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. 'கொஞ்ச நாள் பொறு'ன்னு நான் சொன்னதைக் கேட்காமல், குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. அதன் பிறகு, பேபியைத் தேடியலைஞ்சு கோடம்பாக்கத்தில் கண்டுபிடித்தேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. தான் ஜலீல்னு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச்
சொன்னாள். நிஷாவை என் கண்ணில் காட்டாமல் மறைச்சிட்டாள். பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. அதனால், ''உனக்கு ஊரில் பல பொம்பிளைகளோடு தொடர்பிருக்கு. இனிமே இங்கே வராதேன்னு என்னை விரட்டிட்டா'' என்றார்.

'உங்களுக்கு எத்தனை மனைவிகள்?' என்று ஜப்பாரிடம் கேட்டோம். ''மனைவி என்றால் அது பேபி மட்டும்தான். ஆனால் நாலைந்து பெண்களோடு தொடர்பு உண்டு. எனக்கும் ஓர் இந்துப் பெண்னுக்கும் பிறந்த பையனை முஸ்லிமாக மாத்தி ஷாகுல் அமீதுன்னு பெயர் வைத்து வளர்க்கிறேன்'' என்றார். மீண்டும் தொடர்ந்த அவர், ''பேபி இறந்தபோது எனக்கு தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே போனபோது, 'எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் பெரியப்பா எதுக்கு?'ன்னு கேட்டு, நிஷா அவரை விரட்டியிருக்கா. இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்கள்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன்.

இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்?'' என்றார் அப்துல் ஜப்பார். நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீதைச் சந்தித்தோம். ''சென்னை சாந்தோமில் மலாக்கா சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக்கும் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது' என்றார் போட்டோவுக்கு மறுத்தபடி.
நாகூர் ஜமாத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீனுடன் பேசினோம். ''ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்.

அடுத்து நாகை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகியும், பொதுநல ஆர்வலருமான நாகூர் பாரி, ''நலிந்த கலைஞர்களுக்குக் கிடைக்கும் உதவி நிஷாவுக்குக் கிடைத்தால் நல்லது! திரையுலகைச் சேர்ந்தவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்'' என்றார்.
'சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டோம். ''அந்தப் பொண்னும் அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தபோது உதவினோம். நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு
உதவப்போய் இப்போது எங்களுக்குக் கெட்ட பெயர். உடல்நிலை சரியில்லாத நிஷா, அவரது நகை ஒன்றை அடகு வைத்தார். அந்தப் பணத்தில்தான் கார் ஒன்றை வைத்து அவரைக் கொண்டு போய் நாகூரில் விட்டுவரச் சொல்லி ஏற்பாடு செய்தோம்.நிஷாவை உறவினர்கள் ஏற்க மறுத்ததால், நாகூர் தர்காவில் தன்னை விடச்சொல்லி நிஷாவே சொன்னதால்தான் அங்கே விட்டு விட்டு வந்தோம். நிஷா பல்லாவரத்தில் அவரது எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மாவிடம்தான் மீதி நகைகளைக்
கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்' என்றவர், அதைத் தொடர்ந்து நாம் கேட்ட சில கேள்விகளால் கோபமடைந்து மிரட்டலுடன் போன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.

அடுத்த சில மணி நேரத்தில் முகமது அலியின் செல்போன் மூலம் மகியம்மா என்பவர் நம்மிடம் பேசினார்.
''என்னிடம் மொத்தம் மூனு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டேன். நகைக்கு அது சரியாப் போச்சு. நிஷா இருபத்து நான்கு புடைவை கொடுத்தார். அதில் இருபது புடைவைகளை தலா நூறு ரூபாய்க்கு விற்று அவரிடம் காசு கொடுத்துவிட்டேன். மீதமிருப்பது நான்கு புடைவைகள்தான்'' என்றார்.

''முகமது அலிக்கும் நிஷாவுக்கும் நீண்டகாலமாகத் தொடர்புண்டு' என்று அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அந்த செல்போனைப் பிடுங்கிய முகமது அலி, ''நிஷா இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான் அவரை எனக்குத் தெரியும். அவரோடு எனக்கு முப்பது வருஷப் பழக்கம் என்பதெல்லாம் பொய்!'' என்றார் கோபத்தோடு. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அப்துல் ஜப்பாரின் மகன் ஷாகுல்அமீது, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்ததாக நமக்குத் தெரிய வந்தது.

நிஷா குறித்து ஃபிலிம்நியூஸ் ஆனந்தனிடம் பேசினோம். அவரது நிலை பற்றி மிகவும் வருத்தப்பட்ட அவர், ''அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீஸ§க்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படியரு நிலைமை?'' என்றார் நிஜமான வருத்தத்தோடு.

5 comments:

  1. ஏன் ஒரு முஸ்லிம் அமைப்புகளும் நடிகை நிஷாவை காப்பாற்ற முன்வரவில்லை? அவர் பாவகாரியமே செய்து இருந்தாலும் அவரை எதாவது ஒரு முஸ்லிம் அமைப்புகள் காப்பாற்றியே இருக்க வேண்டும். அது தான் மனித பண்பு

    ReplyDelete
    Replies
    1. Yes.. UR Right... what ever she did, its not a time to see the rules. Time to show the Huminity.

      Delete
  2. appadiyendralum sahul hameed enbavarodu sernthu oru muslim amaipodu udavi ullathe

    ReplyDelete
  3. ivar munna seithatharku ippo anubavikkiraar, nammai padaitha iravanuku therium allava so ivaruku ithu oru padippinaiye!...

    ReplyDelete
  4. avarukku udhavi seidhu irukkalam

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...