(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, December 25, 2010

டிசம்பர் 25-கிறிஸ்து பிறந்த நாள்..?

இன்று கிருத்துவர்களால் ஆரவாரமாக கொண்டாடப்படும் கிறுஸ்துமஸ் நாள் என்பது உண்மையில் ஏசு கிறுஸ்து பிறந்த நாள் தானா என்பதை பைபிள் துணையோடும் வரலாற்று பிண்ணனிகளோடும் அறிந்து கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு கிறுஸ்துவனுக்கும் உள்ளது.

மூன்றாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட ஸடர்னாலியா என்ற ரோம பண்டிகையை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பண்டிகைதான் கிறுஸ்துமஸ் என்ற பரவலான கருத்து உலகில் உள்ளது, ஸடர்னாலியா என்பது ரோம மக்களால் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வந்த ஒரு பண்டிகை, இதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக அதே நாளில் கத்தோலிக்க மத குருமார்கள் யேசுவுக்காக(Christ) சிறப்பு வழிபாட்டை (mass) செய்து வந்தனர் இதுவே பின்னாளில் கிறுஸ்துமஸ் (Christ – mass) என உருமாற்றம் அடைந்துள்ளது.

1. பைபிள்படி (லூக்கா 2:8) யேசு கிறுஸ்து பிறக்கும் தருவாயில் மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளை வயல்வெளிகளில் இரவு நேரத்தில் கவனித்து கொண்டு இருந்ததாக வருகிறது, அக்காலத்து விவசாயிகள் தங்களுடைய வயல்வெளிகளில் உரமிடுவதற்காக ஆட்டு மந்தைகளை கட்டி வைப்பது வழக்கம் அதை மேய்ப்பர்கள் இரவு நேரங்களில் கவனித்து கொள்வர். கொட்டும் பனிக்காலத்தில் விவசாயம் யாரும் பார்க்க மாட்டார்கள் எனவே யேசு பிறந்ததாக பரப்பப்படும் டிசம்பர் என்பது தவறு என்றும் இலையுதிர்காலமாக் இருக்கக்கூடிய செப்டம்பர் ஆக இருக்கத்தான் அதிக வாய்ப்புள்ளது.

2. லூக்கா (2:2)ன் படி சிரியா நாட்டில் சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்த போது குடிமதிப்பு எழுதப்பட்டது
வரலாற்றின் படி அகஸ்டஸ் சீசர் தன்னுடைய 25 ஆண்டுகால ரோம ஆட்சியை கிமு 2 ல் கொண்டாடுவதற்காக தன்னுடைய ஆளுகையின் கீழ் உள்ள அனைத்தையும் மதிப்பிட்டு கொண்டிருந்தார் இதை சிரியாவில் செய்து கொண்டிருந்த சிரேனியு என்பவர் கி.மு மூன்றில் சிரியாவுக்கு கவர்னர் ஆக அனுப்பப்பட்டார்.

இந்த மதிப்பீடுகள் மனிதர்கள் பயணிப்பதற்கு தோதான காலக்கட்டத்தில் நடத்தப்பட்டது. குளிரும்,பனியும் மிகைத்திருக்கும் டிசம்பரில் அல்ல. இதன் மூலம் கி.மு மூன்றில் அல்லது இரண்டில் பிறந்ததாக கூறப்பட வேண்டிய யேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தில் மேலும் தெளிவற்ற நிலை தான் நிலவுகிறது.

எனவே, ரோமானியத்தின் சிறு மதக்குழுக்கள் (pagan) விமரிசையாக கொண்டாடிய சூரியக் கடவுளின் பிறந்த நாளை நகல் எடுத்து, அம் மதத்தினரை கிறுஸ்துவத்தில் இணைப்பதற்காக அவர்கள் கைவிட தயங்கிய கொண்டாட்டங்களை தங்கள் மதத்தின் பெயரால் செய்ய துணிந்து மிகப்பெரும் வரலாற்று புரட்டை அன்றைய கிறுஸ்துவ குருமார்கள் செய்துள்ளனர் என்பது மட்டுமல்லாமல் யேசு கிறிஸ்துவின் பெயராலேயே இந்த முறைகேட்டை தொடர்கின்றனர் என்பதை அன்புக்குரிய கிறுஸ்துவ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும் இது குறித்து உங்கள் மத குருமார்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

பைபிள் மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை

"இது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது” என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழி பெயர்ப்புக்கள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும். இது முக்கியமான தகுதியாகும்.

மூல மொழியில் ஒரு நூல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அதன் மொழிபெயர்ப்புக்கள் வித்தியாசப்படுவதை நாம் சகஜமாகக் காண்கிறோம். மூல மொழியில் உள்ள நூலே இல்லை எனும் போது ஏற்படும் விளைவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக மனிதர்கள் எழுதும் நூல்களே மூல மொழியுடன் இருக்க வேண்டும் எனும் போது கடவுளின் வேதம் என்று நம்பப்படும் நூல் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியம் அல்லவா? இதை என்றேனும் சிந்தித்திருக்கிறீர்களா?

இந்த விஷயத்தில் வேதங்களுக்கும் ஏனைய நூல்களுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனிடமிருந்து வந்ததாக ஒரு நூலைப் பற்றி மக்கள் நம்பினால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

திருக்குர்ஆனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த 14 நூற்றாண்டுகளாகக் குர்ஆனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, மூலமொழியில் அப்படியே முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த முதலாவது தகுதி பைபிளுக்கு இருக்கிறதா? இல்லை. இல்லவே இல்லை! உலகில் எங்கேயும் பைபிள் மூலமொழியுடன் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. மொழி பெயர்ப்புக்களே உள்ளன. அதை விட பரிதாபமான நிலைமை என்னவென்றால் பைபிளின் மூலமொழி எதுவென்பதில் கூட கிறித்தவ மதகுருமார்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவது தான்.

வேதத்தின் மூல மொழி எதுவென்பதைக் கூட தெரியாமலிருப்பதை விட பரிதாபம் வேறு என்ன இருக்க முடியும்? இதை நாம் சுயமாகக் கூறவில்லை. கிறித்தவ மதகுருமார்களின் கூற்றின் அடிப்படையிலேயேபைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை என்றும் அதன் மூலமொழி எதுவென்று தெரியாதென்றும் கூறுகிறோம்.

பைபிளின் மூலமொழி எது?

இது பற்றி கிறித்தவ உலகம் தருகின்ற வாக்குமூலங்களைப் பார்ப்போம். "பெங்களூரில் உள்ள இந்திய வேதாகமச் சங்கம் தமிழில் ஒரு பைபிளை வெளியிட்டுள்ளது. இந்தச் சங்கம் புரோட்டஸ்டண்டு எனும் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தது. இந்த பைபிளின் முதல் பக்கத்தில், எபிரேயு, கிரேக்கு எனும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் பழைய ஏற்பாடு எபிரேயு (ஹீப்ரு) மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் ஆரம்பத்தில் அருளப்பட்டதாகவும் அந்த மூலம் தங்களிடம் உள்ளதாகவும் அந்த மூலத்தை வைத்தே தமிழில் மொழி மாற்றம் செய்ததாகவும் உலகுக்குச் சொல்கிறார்கள். இந்த அர்த்தத்திலேயே மேற்கண்ட வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு தானா? புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழி தானா? என்பதை நாம் ஆராய்வதற்கு முன்னால் இந்திய வேதாகமச் சங்கம் உங்களை ஏமாற்றுவதை அடையாளம் காட்டுவது அவசியமாகின்றது.

ஒரு வாதத்துக்காக இவர்களின் கூற்றில் நம்பிக்கை வைத்து, பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றே வைத்துக் கொள்வோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கேட்கிறோம்: எபிரேயு மொழியில் பைபிள் உலகில் இருக்கின்றதா? இருக்கிறது என்றால் எங்கே இருக்கின்றது? எபிரேயு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமானால் எபிரேயு மொழியும் தமிழ் மொழியும் தெரிந்த தான் மொழி பெயர்க்க முடியும். அந்த எபிரேயு மொழி வல்லுனர் யார்? இந்தக் கேள்விக்கு கிறித்தவ உலகில் விடை கிடைக்காது.

உலகில் எபிரேயு மொழி செத்துப் போய் பல நூறு ஆண்டுகளாகி விட்டன. வழக்கொழிந்து போய்விட்ட "உலகில் எவருக்குமே தெரியாத எபிரேயு" மொழியிருந்து தான் இந்த பைபிள் மொழி மாற்றம் செய்யப்பட்டது என்று கூறுவது அப்பட்டமான மோசடியாகும்..

இஸ்ரேலில் இப்போது இந்த மொழி பயிற்றுவிக்கப்படுகின்றதே என்று கிறித்தவ உலகம் சமாளிக்கலாம். புதிதாக ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டு இன்று அதற்கு எபிரேயு என்று பெயரிட்டுள்ளார்களே தவிர அது எபிரேயு மொழி அன்று. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உலகை விட்டு முற்றிலுமாக விடைபெற்று விட்ட அம்மொழி இனி ஒருக்காலும் திரும்பி வர முடியாது.

இது கற்பனையோ, வெறும் அனுமானமோ இல்லை. அதே கிறித்தவ உலகம் தந்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறுகிறோம்.

கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த, திண்டிவனம் தமிழ் நாடு விவிலிய மறைக் கல்வி வழிபாட்டு நிலையத்தினர் ஒரு பைபிளைத் தமிழில் வெளியிட்டுள்ளனர். 6.4.1980-ல் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமம் என்ற இந்த பைபிளின் முன்னுரையில்,

'நம் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய துணை புரியும் வகையில் திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் 1960-ல் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இணைந்த ஒரு நூலாக 'வுல்காத்தா” எனும் இலத்தீன் மொழிபெயர்ப்பைத் தழுவி பரிசுத்த வேதாகமத்தை முதன் முறையாக தமிழ் மொழியில் வெளியிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறித்தவ நண்பர்களே! நன்றாகக் கவனியுங்கள். இலத்தீன் மொழி பெயர்ப்பைத் தழுவியே பைபிள் தமிழ்ப்படுத்தப்பட்டதாகத் தமிழ் பைபிளின் முன்னுரை கூறுகிறது.

எபிரேயு எனும் மூலமொழி உலகில் இருந்திருந்தால் -அந்த மூலமொழியில் பைபிள் பாதுகாக்கப்பட்டிருந்தால்- இலத்தீன் மொழி பெயர்ப்பை எவரும் தழுவுவார்களா? மூலமொழி உலகில் இல்லாத காரணத்தினால் தான் ஒரு மொழிபெயர்ப்பைத் தழுவி எழுத வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேரிட்டது என்பதில் உங்களுக்கு ஐயமுண்டா?
நண்பர்களே! மற்றொரு விஷயத்தைக் கவனியுங்கள்.

மூலமொழியில் பைபிள் பாதுகாக்கப்பட்டிருக்குமானால் அது கத்தோலிக்கப் பிரிவினரிடம் இருப்பதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் புரோட்டஸ்டண்டு பிரிவை விட காலத்தால் முந்தியதும் ஆதியானதும் கத்தோலிக்கப் பிரிவே. மூலமொழி வேதத்தின் ஒரு பிரதியாவது அவர்களிடம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர்களிடம் இல்லையென்றால் உலகில் எவர்களிடமும் குறிப்பாகப் புரோட்டஸ்டண்டுகளிடம் இருக்கவே முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். எனவே மூலமொழி வேதம் இல்லை என்பதே தெளிவு.
கத்தோலிக்க உலகம் இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறது. புரோட்டஸ்டண்டுகள் எபிரேயு மூலமொழியில் பைபிள் உலகில் இருக்கின்றது என்ற பொய்யான கருத்தை மெய்ப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றும் புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்கு என்றும் புரோட்டஸ்டண்டுகள் கூறுகின்றனர். இந்தக் கூற்றிலாவது உண்மை இருக்கின்றதா என்றால் அதுவுமில்லை. புரோட்டஸ்டண்டுகளின் இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட பைபிளில் புதிய ஏற்பாட்டின் துவக்கத்தில்,

நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு இது 'மூல பாஷையாகிய கிரேக்கு”க்கு இசையத் திருத்திய மொழிபெயர்ப்பு(1954) எனக் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய ஏற்பாடு என்பது முதன் முதலில் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டதாகவும், அதிலிருந்து தான் பல மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் உலகை நம்ப வைப்பதற்காகத் திட்டமிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கூற்றாவது உண்மையா? 'இல்லை” என்று தனக்குத் தானே மறுத்துக் கொள்கிறது கிறித்தவ உலகம்.
புதிய ஏற்பாட்டின் முதலாவது சுவிஷேசம் 'மத்தேயு” என்பது. கத்தோலிக்கர்கள் திண்டிவனத்திலிருந்து வெளியிட்ட பைபிளில் மத்தேயு சுவிஷேசத்தின் முன்னுரையில், 'ஆகையால் அக்காலத்தில் பாலஸ்தீன நாட்டில் வழக்கிலிருந்த 'அரமாயிக்” மொழியில் எழுதினார்.

 அவர்சுவிஷேசத்தை கி.பி 50ஆம் ஆண்டுக்குள் எழுதியிருக்க வேண்டும். 70 ஆம் ஆண்டுக்குப் பின் இது கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சுவிஷேசம் எழுதப்பட்ட காலத்தில் பாலஸ்தீன நாட்டில் அரமாயிக் மொழி தான் வழக்கத்தில் இருந்தது. அந்த மொழியில் தான் சுவிஷேசங்கள் எழுதப்பட்டன. அதன் பிறகு கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதப்பட்டது என்று கத்தோலிக்கர்கள் தெளிவான வாக்கு மூலம் தருகின்றனர்.

கிரேக்க பைபிள்-புதிய ஏற்பாடு --ஒரு மொழி பெயர்ப்புத் தானே தவிர மூலமொழி நூல் அன்று. புதிய ஏற்பாட்டின் மூலமொழியாக இருந்த அரமாயிக் மொழியில் புதிய ஏற்பர்டு உலகில் இருக்கின்றதா? அந்த மொழி அறிந்தவர்கள் இருக்கின்றார்களா? நிச்சயமாக இல்லை.

புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழியில்லை என்தபற்கும் அரமாயிக் எனும் மூலமொழியில் உலகில் எங்கேயும் பைபிள் கிடையாது என்பதற்கும் இதை விட வேறு சான்று தேவை இல்லை.
மூலமொழியாக நம்பப்படும் எபிரேயு மொழியில் பழைய ஏற்பாடு உலகில் கிடையாது என்பது ஒரு புறமிருக்க, அதன் மூலமொழி எபிரேயு தானா? என்பதும் சந்தேகத்திற்குரியதே.

ஏனெனில் பழைய ஏற்பாடு என்பது மோசே, தானியேல், எசக்கியேல், யோபு போன்ற பல தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டவற்றின் தொகுப்பு என்பதை முன்னரே நாம் கண்டோம். வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டவை அனைத்தும் எபிரேயு எனும் ஒரே மொழியில் அருளப்பட்டிருக்க வழியில்லை.

ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழி பேசி இருக்கலாம். அவரவர் மொழியில் அவரவர் வேதங்கள் அருளப்பட்டிருக்கலாம். பல்வேறு மொழிகளில் அருளப்பட்டவை பின்னர் எபிரேயு மொழியில் பெயர்த்தெழுதப்பட்டு பின்னர்அதுவும் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இதில் எழுகிறது.

இந்த எண்ணம் தவறு என்றே வைத்துக் கொண்டாலும், பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்பதை ஒப்புக் கொண்டாலும் எபிரேயு மொழியில் பைபிளில் பழைய ஏற்பாடு கிடையாது என்பதில் ஐயமில்லை. அது போல் புதிய ஏற்பாடும் அதன் மூலமொழியாகிய அரமாயிக் மொழியில் கிடையாது. கிறிஸ்தவ உலகில் பைபிளில் மூலநூல் நிலையில் கிரேக்க மொழி பெயர்ப்பே இருக்கின்றது.
இப்போது உங்கள் முன்னுள்ள கேள்வி, இரண்டு ஏற்பாடுகளும் ஏன் மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை என்பதே!

ஜசகல்லாஹ் : http://www.jesusinvites.com/

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...