(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 29, 2010

ரேஷன் கடை & போஸ்ட் ஆபீஸ்க்கு புதியகட்டிடம்..

தெற்குதெரு ஏழுலப்பை பள்ளிவாசல் வாயிலில் இயங்கிவந்த போஸ்ட் ஆபீஸ் மற்றும் ரேஷன் கடை..

தற்போது ஏழுலப்பை பள்ளிவாசல் புதுமனைத்தெரு வாயில் புது கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது.


Saturday, November 27, 2010

நாகை மாவட்டத்தில் விடா மழை...


 
நாகூரில் பாதாள சாக்கடை அமைக்கும் பகுதியில் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது




ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு (உங்களது நினைவுக்குச் சிலதுளிகள்)

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள்பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நல்லது.




ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சிலதுளிகள் :-


அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?




ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?




இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?




ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?




தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?




தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களைவிளங்கி ஓதினீர்களா?




மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவுகூர்ந்தீர்களா?




மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப்பார்த்தீர்களா?




யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..!என்று மூன்று முறை கூறினீர்களா? ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம்மன்றாடுகின்றது). (திர்மிதீ)




இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?




தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்துகொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?




அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?




செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இதுபோன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?




இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?




உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களேகடிந்து கொண்டீர்களா?




பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?




அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?




ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?




நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?




இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக்கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)




மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?




உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சிலநேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?




இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?




இறை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவமன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.




இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?




உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?




மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?




உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?




இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?




யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவமன்னிப்புக்கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?




மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்தமறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""




'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாகஈமான் கொண்டோம் 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும்,எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (ஆல இம்றான்)


(ZAZAKALLAH) to brother haja mohamed.

Thursday, November 18, 2010

வீடியோ கேம் - குழந்தைகளுக்கு மனநோய் ஆபத்து !!

"வீடியோ கேம்" விளையாட்டுக்களில் சிறுவர்கள் ஆர்வம் காட்டினால் கண்,மனநல பாதிப்புகளுக்கு ஆளாவர், என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 

முன்பெல்லாம் உடல் உழைப்பான விளையாட்டுக்கள் தான் சிறுவயதில் விளையாடுவது வழக்கம் .. ஓட்ட பந்தயம் , பே பே , கிரிக்கெட், ரவ , கிட்டி பில்லு ,பம்பரம் , திருடன் போலீஸ் என்று ஓடி ஆடி விளையாடியது மலையேறி விட்டது .


தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெருகி விட்ட நிலையில், சிறுவர்கள் வீடியோ கேம், கம்ப்யூட்டர், "டிவி'க்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 



சில நேரங்களில் பெற்றோரை ஏமாற்றி, கம்ப்யூட்டர் மையங்களுக்கு 

சென்று வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். "பளிச்"சிடும் திரை முன்பு பலமணி நேரம் செலவிடுவதால் அவர்களின் கண்ணும், மனமும் பாதிப்படைகிறது. 

மதுரை அரவிந்த் கண்ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் ஆர்.முரளிதர் கூறியதாவது:"டிவி', வீடியோ கேம்களில் ஈடுபடுவோர் கண்களை சிமிட்ட மறந்து போவார்கள். இதனால், கண்களில் அதிகம் நீர்வற்றிய நிலையில், அதிக சிரத்தை ஏற்பட்டு, உளைச்சல் ஏற்படும். 


தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால், கண்கள் சிவந்து போகும். கண்களுக்கு களைப்பு ஏற்படும். இதனால், நேரம் வீணாவதுடன் தேவையின்றி கண்களுக்கு பாதிப்பை விலைக்கு வாங்குவதாக இருக்கும். கண்களில் பார்வை குறைவாக உள்ளவர்களை மானிட்டர்களின் முன் நெருங்கி அமர்ந்து ரசிப்பதை வைத்து கண்டு பிடிக்கலாம்.



இப்படி நெருங்கி அமர்ந்து ரசிப்பதால், மானிட்டர்களில் இருந்து வரும் ஒளி அதிகபட்சமாக 'பளிச்'சிடுவதால் மாணவர்களின் கவனம் போகும். அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் (எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன்) மூளைவரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வுகளை மேற்கொள்வோர் சந்தேகிக்கின்றனர்.

தரமான மொபைல்களில், வெளிப்படும் கதிர்வீச்சின் அளவை குறிப்பிட்டு இருப்பர். பல சீன தயாரிப்புகளில் அவற்றை குறிப்பிடுவதில்லை. வீடியோ கேம்களில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்பே தெரியவரும். இதனால் சிறுவர்களிடம் மொபைல், "டிவி', வீடியோ போன்றவற்றை 
தரக்கூடாது. 

அவற்றை பயன்படுத்தும் அவசியம் இருந்தால், மானிட்டர்களில், ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை பயன்படுத்தி பார்க்க வேண்டும். இருட்டறையில் இருந்து அவற்றை பார்ப்பதை தவிர்த்து, வெளிச்சத்தில் இருந்தபடி பார்ப்பது கண்களுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார். 



நம் ஊரிலும் பல இடங்களில் கேம் சென்டர்கள் இயங்குகின்றன. இந்த கேம் சென்டர்கள் சிறுவர்களை குறிவைத்தே இயங்குகின்றன.  கேம் சென்டருக்கு நீங்கள் சென்று பார்த்தல் - யார் என்ன செய்கிறார்கள் ,பக்கத்தில் யார் இருகிறார்கள் என்று கூட தெரியாமால் மெய் மறந்து விளையாடி கொண்டு இருகிறார்கள்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மனநல பிரிவு தலைமை பேராசிரியர் வி.ராமானுஜம் கூறியதாவது:வீடியோ கேம் விளையாடுவது, எந்நேரமும் டிவி' முன் செலவிடுவது,போதைப் பழக்கத்தை போன்று நம்மை ஆக்கிரமித்து விடும். சிறுவர்கள் அவற்றிற்கு அடிமையாகி விட்டதையே குறிக்கும். இதனால் உடல்,உள்ளத்தின் நலம் கெடும். 



படிப்பின் மீதான ஆர்வமும், கவனமும் கெடும். மொத்தத்தில் வாழ்க்கையே தொலைந்து போகலாம்.வீடியோ பழக்கத்தில் மூழ்கும் சிறுவர்கள் அதற்காக பெற்றோரை ஏமாற்றி பணம் பெறும் சூழ்நிலை உருவாகும். பின்னாளில் அது திருட்டு, மோசடி போன்ற தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும். மனதளவில் அதில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர். சுய கட்டுப்பாட்டை இழந்து போவர்.பள்ளிக்கு போகாமல்,போக்குக் காட்டிச் செல்வர். இவ்வாறு அவர் கூறினார். 

ஆதலால் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.. இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் பயன்பாடு என்பது இன்றியமையாத ஒன்று .. அதே சமயம் அதே கதி என்று இருந்தால் பணம் ,நேரம் ,உடல் ,மனம் என்று அனைத்தையும் வீணடிக்க வேண்டிய நிலையை அடைய வேண்டிவரும். 
எதிலும் ஒரு நடுநிலையான போக்கை கடைபிடிக்க வேண்டும். அவர்களின் கேம் ஆர்வத்தை சமார்த்தியமாக மாற்றி அமைக்க வேண்டும்.
    

Friday, November 12, 2010

சினிமா, டிவி சீரியல்களை பார்ப்பதை புறக்கணித்து குழந்தைகளை பாதுகாப்போம்..


கோவை பள்ளி மாணவர்கள் ரித்திக் (8) மற்றும் முஸ்கான் ஆஸ்வால் (11) ஆகிய இருவர், கால் டாக்சி ஓட்டுனரால் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இத்தகைய சம்பவம், இனிமேல் நடக்காமல் தவிர்ப்பது தொடர்பாகவும், சமீப காலமாக அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு தீர்வு காண்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம், கிக்கானி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,  கோவை மாவட்ட மெட்ரிக் அகாடமிக் கவுன்சில் சார்பில்  நடத்தப்பட்டது.  அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள், மனோதத்துவ நிபுணர்கள் ஆகியோர் பெரும்திரளாக பங்கேற்றனர்.
.
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,
நம் குழந்தைகள் அணியும் உடைகள் கூட பெரிய பிரச்னைகளை கொண்டு வந்து விடுகின்றன. தந்தையின் பின்னால் அமர்ந்து செல்லும் நம் மகள்களின் பள்ளி சீருடைகள், பிறர் கண்களை உறுத்தும் அளவுக்கு உள்ளன.  சீருடைகளை மாற்ற வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு மட்டுமே நாட்டின் பாதுகாப்பு. பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் இன்று பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை ஒத்துக் கொள்ள வேண்டும். அரைகுறை உடை அணிவித்து “ரியாலிட்டி Showக்களில் நம் குழந்தைகளை காட்சிப் பொருளாக்கும் நாம்தான் இதற்கு காரணம்.
ஆட்டோக்களில் மூன்று பேருக்கு மேல் பயணிக்க கூடாது என போக்குவரத்து துறை சட்டம் கூறுகிறது. அதே ஆட்டோவில் இருபது குழந்தைகளை திணித்து கொண்டு சென்றால் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
முதுகில் புத்தக மூட்டையை சுமந்தபடி அரசு பஸ்சின் பின்னால் ஓடும் நம் மாணவியரின் விலகும் உடைகளை அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம். நிறுத்தாமல் வேகம் எடுக்கும் பஸ்சை எவரும் கண்டிப்பதில்லை. உடைகளை சரி செய்தபடி பஸ்சை பிடிக்க ஓடும் அந்த மாணவியின் இடத்தில் இருந்து பிரச்னையை நாம் பார்க்க வேண்டும்.
பெண்களையும் குழந்தைகளையும் மோசமாக சித்திகரிக்கும் சினிமாக்களையும் “டிவி’ சீரியல்களையும் புறக்கணிப்போம். குழந்தைகளுடன் தினமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். பள்ளியில் நடந்தவற்றை தினமும் காது கொடுத்து கேளுங்கள், என்றார்.

அழகான இறுதி முடிவு !!!

யா அல்லாஹ் ! எங்களுக்கு நீ இறுதி முடிவை உறுதிமிக்க ஈமானோடு ஏற்படுத்துவாயாக!





ZAZAKALLAH TO BROTHER INAS.

Thursday, November 11, 2010

நாகூர் சின்ன ஆண்டவருக்கு கந்துரி ???

அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்" என்றும் கூறினார். (12:87)




“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.அல்குர்ஆன் 18:103, 104

Tuesday, November 9, 2010

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.



குர்பானி கொடுக்கும் நாட்கள்

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.

அறிவிவப்ப்வர் பரா (ரலி)

நுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)

பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை

குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)

நுல் முஸ்லிம் (3637)

முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் அதா பின் யஸார்,

நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அறிவிப்பவர் அலீ (ரலி)

நுல் புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)

நுல் முஸ்லிம் (2323)

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

விநியோகம் செய்தல்

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்

ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் பரா (ரலி)

நுல் நஸயீ (4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது

ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)

நுல் முஸ்லிம் (3631)

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)

நுல் நஸயீ (4285)

நாமே அறுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

(www. tntj.net)

Monday, November 8, 2010

ஹஜ்ஜின் பெயரால் வியாபாரங்களும், கொள்ளைகளும் எச்சரிக்கை !!

புகைப்படத்தை கிளிக் செய்து பார்க்கவும்.
























ஜசக்கல்லாஹ் : ஆன்லைனபிஜே.காம்

Tuesday, November 2, 2010

புற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவ முன்வாருங்கள் இன்ஷால்லாஹ்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரத்தில், ஓரியண்ட் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் அபூபக்கர் என்ற படத்திலுள்ள ஐந்து வயதுள்ள மாணவன் முதலாம் வகுப்பு பயின்று வருகிறான்.

பள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த கேன்சரை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க இயலாதாம். தொடர்ந்து 2 வருட காலம் தீவிர சிகிச்சை செய்ய வேண்டுமாம். (சுட்டி: மருத்துவர்களின் பரிந்துரை) மிகச் சாதாரண வேலையில் இருந்து கொண்டு, தம்மால் இயன்ற அளவில் சேமித்து ஆங்கிலக் கல்வியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாணவனின் தந்தை சுலைமான் மீளாத் துயரத்திலும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் உதவிக் கரங்களையும் எதிர்பார்த்தும் உள்ளார்.
வங்கிக் கணக்கு விபரங்கள்:
M. Sulaiman
SBT, Colachel Branch
A/C No : 57059234495
கேன்சர் போன்ற பணக்கார நோய்க்கு 2 வருட காலம் தீவிர சிகிச்சை என்பதும் அது சுலைமான் போன்ற ஏழைகளைப் பொறுத்த மட்டில் எவ்வளவு சிரமம் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.  சிறுவன் அபூபக்கர், உங்களது உதவியை எதிர் நோக்கி இருக்கிறார்.

இங்கே உள்ள வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை அனுப்பி வைத்தால், வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். இதற்கான நற்கூலிகள் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்!
உதவியினை உடனடியாக அனுப்ப இயலாதவர்கள் இவ்விஷயத்தை பிறருக்கு உடனடியாக தெரிவியுங்கள். அத்துடன் இந்த குடும்பத்தினரின் இன்னல்களைப் போக்கிட, குறிப்பாக இந்த சிறுவனுக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...