(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, March 24, 2014

மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது


மலேசிய பிரதமர் பிரதமர் நஜீப் ரசாக்
மலேசிய பிரதமர் பிரதமர் நஜீப் ரசாக்

மாயமான மலேசிய விமானம் (எம்.எச்.370), தெற்கு இந்தியப் பெருங்கடலில் மூழ்கிவிட்டது என்பது செயற்கைக்கோள் தகவல்களின் அடிப்படையிலான புதிய பகுப்பாய்வு மூலம் தெரியவருவதாக, அந்நாட்டுப் பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்தார்.

மேலும், மாயமான விமானத்தில் இருந்த 239 பயணிகளில் எவரும் உயிர் பிழைத்திருக்க சாத்தியம் இல்லை என்ற அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய பிரதமரின் இந்த அறிவிப்பு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் மாயமான விமானம் தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகவே கருதப்படுகிறது.
கடந்த மார்ச் 8-ம் தேதி 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதும், அதைத் தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தேடுதல் பணிகளில் ஈடுபடத் தொடங்கின.

விமானம் மாயமாகி இன்றுடன் 17 நாள்கள் ஆகின்றன. ஆஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் தெற்கு இந்திய பெருங்கடலில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, ஆஸ்திரேலியாவின் பியர்ஸ் விமான தளத்தில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தேடுதல் பணிக்காக அடுத்தடுத்து நேற்று புறப்பட்டுச் சென்றன.
இதில் ஐ.எல்.-76 என்ற சீன போர் விமானம், மாயமான விமானத்தின் பாகங்களாகக் கருதப்படும் சில பொருள்களைக் கண்டுபிடித்துள்ளது. வெள்ளை நிறத்திலான 2 பெரிய உடைந்த துண்டுகளும் சில சிறிய சிதறல்களும் குறிப்பிட்ட பகுதியில் ஆங்காங்கே மிதப்பதாக சீன விமானி தகவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆஸ்திரேலிய விமானியும் சந்தேகத்துக்குரிய 2 பொருள்கள் கடலில் மிதப்பதாக பியர்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று செவ்வக வடிவிலும் இருப்பதாக அவர் விவரித்துள்ளார்.

சீன மற்றும் ஆஸ்திரேலிய விமானிகள் சுட்டிய காட்டிய பகுதிகளுக்கு போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன. அங்கு மிதக்கும் மர்ம பொருள்களை மீட்டால் மட்டுமே உறுதியாகக் கூற முடியும் என்று ஆஸ்திரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில்தான், எம்.எச்.370 விமானம் கடலில் மூழ்கிவிட்டது என்ற முடிவுக்கு வருவதாக, மலேசிய பிரதமர் அறிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...